புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு தி.மு.க. கோரிக்கை


புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு தி.மு.க. கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2017 11:14 PM IST (Updated: 14 May 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பகுதியில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

இளையான்குடி,

இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அனிதா ராஜன்பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் மலைமேகு, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பஞ்சக்கிளி மகளிர் தொண்டரணி முனீஸ்வரி, அஜிபஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் ஆலோசனை உரையாற்றினார்.

ரேஷன் பொருட்கள்

பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளையான்குடி வட்டாரத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் அவர்களது பொருளாதார நிலைமை சீர்குலைந்து போய் உள்ளது. இளையான்குடி மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதே நிலை நீடிக்கிறது. எனவே பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் சமீப காலமாக பொருட்கள் சரிவர வழங்கப்படுவது இல்லை. தற்போது ரேஷன் கடைகளில் உளுந்து, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கவில்லை. எனவே அவற்றை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடைக்குமாறு வழங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகள்

இளையான்குடி ஒன்றியத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே இளையான்குடி பகுதியில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இளையான்குடி மற்றும் சாலைகிராமம் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதேபோல் இளையான்குடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாய்களை முறையாக பராமரித்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story