ஆத்தூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 6 பெண்களிடம் 46½ பவுன் நகை அபேஸ்


ஆத்தூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 6 பெண்களிடம் 46½ பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பெண்களிடம் 46½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விநாயகபுரம் தெற்குகாடு சாலையில் புதிதாக சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆத்தூர், நரசிங்கபுரம், விநாயகபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றும் போது பெண்கள் பக்தி பரவசத்துடன் அண்ணாந்து பார்த்து சாமி கும்பிட்டனர்.

இந்த சமயத்தில் மர்மகும்பலை சேர்ந்தவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பெண்களிடம் இருந்து நகைகளை அபேஸ் செய்து விட்டனர். கும்பாபிஷேகம் முடிந்து பின்னர்தான் நகை அபேஸ் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

46½ பவுன் நகை

இதில் விநாயகபுரம் ராஜீவ்நகரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி லீலாவதி (வயது 62) கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலிக்கொடி, நேதாஜி நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி மங்கையர்க்கரசியின் (65) 4 பவுன் தாலிக்கொடி, விநாயகபுரம் குப்புசாமி மனைவி சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை, ராஜேந்திரனின் மனைவி விஜயகுமாரியின் (51) 13 பவுன் தாலிக்கொடி, கிருஷ்ணன் மனைவி சரோஜாவின் (60) 7½ பவுன் நகை, பொன்னுசாமி மனைவி லீலாவின் (52) 7½ பவுன் நகை என 6 பெண்களிடம் இருந்து 46½ பவுன் நகைகள் அபேஸ் செய்யப்பட்டு இருந்தன. இதின் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் இருக்கும்.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. எனவே, அந்த வீடியோவை போலீசார் வாங்கி பார்த்து நகை அபேஸ் செய்யும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

மேலும், நகை அபேஸ் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களாகத்தான் இருக்க முடியும் என்றும், இவர்கள் விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கும்பலாக புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கோவில் விழாவில் பெண்களிடம் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story