ஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்


ஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 15 May 2017 12:32 AM IST (Updated: 15 May 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொலை செய்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கோவிந்தாபுரம் கரடிகுண்டு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 65), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு செந்தில்குமார் (39), செந்தமிழன் (32) என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. அருகருகே வசித்து வந்தனர். செந்தில்குமாரின் மனைவி ராதா. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராதா கணவருடன் தகராறு செய்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

முருகனுக்கும், மகன் செந்தில்குமாருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை தந்தை, மகன் இருவரும் ஒன்றாக மது குடித்து உள்ளனர். போதை அதிகமானதும் செந்தில்குமார் வீட்டில் போய் படுத்து உள்ளார். அப்போது அங்கு வந்த முருகன், செந்தில்குமார் வீட்டின் கதவை தட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த செந்தில்குமார் ஆத்திரத்தில், வீட்டின் கதவை எதற்கு தட்டுகிறாய்? என கூறி முருகனை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

கொலை

இதில் முருகனின் தலை வீட்டின் முன்பு உள்ள பந்தல்காலில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள கல்லின் மீது விழுந்தார். இதனால் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து இரவில் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

நேற்று காலை செந்தமிழன் தீவட்டிப்பட்டி போலீசில் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொலை குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். குடிபோதையில் தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story