கண்ணமங்கலம் அருகே காரில் பதுக்கிய 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கண்ணமங்கலம் அருகே காரில் பதுக்கிய 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரில் பதுக்கி வைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள இரும்புலி கிராமம் ஓடைக் கால்வாய் அருகே 3 நாட்களுக்கு மேலாக கேட்பாரற்ற நிலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு சென்று அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 3 நாட்களுக்கு மேலாக கார் அங்கு நிற்பதாகவும், இரவு வேளையில் காரை மர்மநபர்கள் நிறுத்தி சென்றதும் தெரிய வந்தது.

1 டன் செம்மரக்கட்டைகள்

இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்க சீட்டின் அடியில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செம்மரக்கட்டைகள் வெளியே எடுத்தனர். சீட்டின் அடியில் 15 செம்மரக்கட்டைகள் இருந்தது. அதன் எடை 1 டன் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். காரில் தமிழ்நாடு பதிவு எண் இருந்தது.

போலீசார் மேலும் காரை சோதனையிட்டத்தில், டிரைவர் சீட்டின் அடியில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் ஒன்று இருந்தது தெரிந்தது.

இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தபோது கார் பழுது அடைந்ததால், அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கார் பறிமுதல்

இதையடுத்து போலீசார் செம்மரக்கட்டைகளுடன் காரை பறிமுதல் செய்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து சந்தவாசல் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story