குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டு போட்டு போராட்டம்


குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டு போட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2017 12:57 AM IST (Updated: 15 May 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணாபுரம்,

திருவண்ணாமலை அருகே உள்ள மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கிராமமக்களுக்கு சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பூட்டு

கிராமமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றும், விவசாய நிலங்களுக்கு சென்றும் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். நேற்று காலை குடிநீர் வரும் என்று பொதுகுடிநீர் குழாய் அருகே மக்கள் காத்திருந்தனர். வெகுநேரமாக காத்திருந்தும் குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சிமன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் சென்று முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

தொடர்ந்து காலிகுடங்களுடன் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு கிராமமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அமாவாசை மற்றும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அமாவாசை தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Next Story