அருளானந்தபுரம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


அருளானந்தபுரம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 May 2017 3:45 AM IST (Updated: 15 May 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

அருளானந்தபுரம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு

வரதராஜன்பேட்டை,

அருளானந்தபுரம் கிராமம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. உச்சநீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து ஆண்டிமடத்தில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதை யடுத்து அந்த டாஸ்மாக் கடைகள் மாற்றப்பட்டு ஒரு டாஸ்மாக் கடை ராங்கியம் பகுதியிலும், மற்றொரு கடை விளந்தையிலும் செயல்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இந்நிலையில் அருளானந்்தபுரம் கிராமம் அருகே பட்டணங்குறிச்சி சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்்கு நேற்று புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திவாரம் தோண்டும் பணிகளும் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த அருளானந்தபுரம், பட்டணங்குறிச்சி, குப்பம் கிராம பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கூறி விருத்தா சலம்-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம், எங்கள் பகுதியில் டாஸ்மாக்கடை அமைக்க கூடாது என்று புகார் எழுதி மனுவாக மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் கலால் துறையினரிடம் கொடுங்கள். அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்-விருத்தா சலம் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story