கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன் கோவில் தேரோட்டம்


கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 15 May 2017 1:24 AM IST (Updated: 15 May 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செஞ்சி,

செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் அம்மச்சாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரம்மோற்சவம், கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 7-ந்தேதி பால்குடம் ஊர்வலமும், 9-ந்தேதி சீனிவாசப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

அதை தொடர்ந்து 12-ந்தேதி திருவிளக்கு பூஜையும், நேற்று முன்தினம் விநாயகர், சீனிவாசப்பெருமாள், அம்மச்சாரம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, முத்துப்பல்லக்கில் சாமிகள் வீதியுலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மச்சாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மச்சாரம்மன் எழுந்தருளினார்.

பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக இளைஞரணி தலைவர் செந்தில்குமார் அடிகளார் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் கிராமத்தின், முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் கீழ்மாம்பட்டு மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story