தமிழகஅரசு அறிவித்தபடி 300 அமுதம் பல்பொருள் அங்காடிகளை விரைந்து திறக்க வேண்டும்


தமிழகஅரசு அறிவித்தபடி 300 அமுதம் பல்பொருள் அங்காடிகளை விரைந்து திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 May 2017 1:30 AM IST (Updated: 15 May 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகஅரசு அறிவித்தபடி 300 அமுதம் பல்பொருள் அங்காடிகளை விரைந்து திறக்க வேண்டும்

தஞ்சாவூர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் கோவிந்தராசன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலம் முழுவதும் 300 அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் திறக்கவில்லை. இதை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மூலம் உற்பத்தி செய்யப்படும் நீரா பானத்தை மொத்த கொள்முதல் செய்து நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச சம்பளம் சட்டப்படி வழங்க வேண்டிய அகவிலைப்படியை 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே விரைவாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை சம்பளம்

தரக்கட்டுப்பாடு பணியாளர்களுக்கு தரக்கட்டுப்பாடு பணியோடு நிர்வாக பணியையும் சேர்த்து பார்க்க வற்புறுத்தப்படுகிறது. இது பணி விதிகளுக்கு விரோதமானது என்பதால் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தரக்கட்டுப்பாடு பணிகளை மட்டும் மேற்கொள்வோம். நிர்வாக பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

நிர்வாக பணியாளர்களுக்கும், தரக்கட்டுப்பாடு பணியாளர்களுக்கும் ஒரே அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தரக்கட்டுப்பாடு பணியாளர்களுக்கு சம்பளம் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்து சம அளவில் சம்பளம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு, மாநில பொதுச் செயலாளர் புண்ணீஸ்வரன், இணை பொதுச் செயலாளர் குணசேகரன், மாநில செயலாளர்கள் கோதண்டபாணி, சுப்பிரமணியன், அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Next Story