திருவாரூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்


திருவாரூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 15 May 2017 1:41 AM IST (Updated: 15 May 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கண்கொடுத்தவணிதத்தில் மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கண்கொடுத்தவணிதம் கடைவீதியில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையில் மதுக்கடை உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதால் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மதுக்கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடமும், டாஸ்மாக் நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உண்ணாவிரதம்

இதனை தொடர்ந்து நேற்று கண்கொடுத்தவணிதம் கடைவீதியில் கண்கொடுத்தவணிதம், பருத்தியூர், எருக்காட்டூர், விடயபுரம் உள்பட 10 கிராம மக்கள் மதுக்கடையை மூடக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும். இல்லையென்றால் கிராம மக்களே மதுக்கடை அகற்றுவார்கள் என தெரிவித்தனர்.

Next Story