கோடிமுனையில் ராட்சத அலையில் சிக்கிய மாணவர் கதி என்ன? 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்


கோடிமுனையில் ராட்சத அலையில் சிக்கிய மாணவர் கதி என்ன? 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 May 2017 3:00 AM IST (Updated: 15 May 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

கோடிமுனையில் ராட்சத அலையில் சிக்கிய மாணவரின் கதி என்ன? என்று கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், மீனவர்களும் நேற்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குளச்சல்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிருஷ்ணன் பாலையா பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 21), மாணவர். இவருடைய நண்பர் லிவின்ஸ்டன் (19). இவர்கள் உள்பட 13 பேர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் கோவளத்திற்கு வந்தனர். திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு அனைவரும் கோடிமுனை சென்றனர்.

இந்த நிலையில் ஸ்டீபனும், லிவின்ஸ்டனும் கோடிமுனை தூண்டில் வளைவில் உள்ள அந்தோணியார் குருசடி பாறையில் நின்று கடல் அழகை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வந்த ராட்சத அலை இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலையில் சிக்கிய இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதற்குள் மற்றொரு ராட்சத அலை லிவின்ஸ்டனை வெளியே தள்ளியது. உடனே கரையில் நின்றவர்கள் அவரை மீட்டனர். ஆனால் ஸ்டீபனை மீட்க முடியவில்லை.

2-வது நாளாக தேடும் பணி

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மீனவர்களுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஸ்டீபன் கிடைக்கவில்லை.

நேற்று 2-வது நாளாக தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகுகள் மூலம் தேடினர். இவர்களுடன் இணைந்து மீனவர்களும் கட்டுமரங்கள் மூலம் ஸ்டீபனை அலை இழுத்துச் சென்ற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிரமாக தேடினர். ஸ்டீபன் 2-வது நாளாகவும் மீட்கப்படாததால் அவர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

Next Story