திருச்சி மாநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


திருச்சி மாநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 May 2017 3:45 AM IST (Updated: 15 May 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பா.ஜ.க.இளைஞர் அணி கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி,

திருச்சி மாநகரில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க.இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இளைஞர் அணி கூட்டம்

பாரதீய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கவுதம் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலகணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- திருச்சி நகரில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அப்புறப்படுத்த வேண்டும். முக்கிய சாலைகளில் சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். திருச்சி மாநகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் கடைவீதி பகுதிகளில் உள்ள முக்கிய சாலை மற்றும் தெருக்களுக்கு நம்மை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேயர்கள் பெயர் சூட்டப்பட்டு இருப்பதை அகற்றி விட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களை சூட்டவேண்டும். காவிரி ஆற்றில் முக்கொம்பில் இருந்து கும்பகோணம் வரை 2 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்டி விவசாயம் செழிக்கும் வகையில் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் மணல் அள்ளுவதை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தின் மைய பகுதியில் இருக்கும் திருச்சியை மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story