வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தாய்மொழி கல்வி அவசியம்


வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தாய்மொழி கல்வி அவசியம்
x
தினத்தந்தி 15 May 2017 3:45 AM IST (Updated: 15 May 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தாய்மொழி கல்வி அவசியமாகும் என்று முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறினார்.

திருச்சி

தமிழ்நாடு கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ‘அரசு பள்ளிகளை பலப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடந் தது. மாநில ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘ரேங்க்’ முறை ஒழிப்புக்கு வரவேற்பு

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு முடிவில் ‘ரேங்க்’ முறை ஒழிக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்குரியது. இதனை முதலாம் வகுப்பில் இருந்தே அமலுக்கு கொண்டு வரவேண்டும் என கல்வியாளர் என்ற வகையில் கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை ஒழிக்கப்படவேண்டும். குழந்தைகள் புரிந்து படித்து அறிவை வளர்த்துக்கொள்ளும் கல்வி முறை வளரவேண்டும்.

வேலையில்லா திண்டாட்டம்

வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் தனியார் பள்ளிகள் கிடையாது. கல்வி நிறுவனங்களை அரசு தான் ஏற்று நடத்துகின்றன. எனவே தமிழகத்திலும் அதைப்போன்று அரசே கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும். ‘ரேங்க்’ முறை ஒழிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளுக்கு இடையே உள்ள போட்டி குறைய வாய்ப்பு இருக்கிறது. அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்கவேண்டும் என கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நமது நாட்டில் வேலை இல்லா திண்டாட்டதை ஒழிக்க வேண்டுமானால் தாய்மொழி கல்வி அவசியமாகும். தமிழை கட்டாயம் ஆக்கி விட்டு ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படிக்க ஏற்பாடு செய்யலாம். அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் விரும்பி சேர்க்கும் வகையில் அவற்றை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை, மாநில துணைத்தலைவர் கோபிநாதன், திருச்சி மண்டல தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். 

Next Story