கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 May 2017 4:00 AM IST (Updated: 15 May 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சி ராம்ஜிநகர் அருகே பெரியநாயகி சத்திரம் என்கிற சத்திரப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தங்களது கட்சியின் கொடிக்கம்பத்தை அமைத்து இருந்தனர். இந்த கொடிக்கம்பத்தை கடந்த மாதம் யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது குறித்து ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் கொடிக்கம்பத்தில் இருந்த கயிறு, கொடி உள்ளிட்டவை அகற்றப்பட்டு இருந்தது. இது குறித்து மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டு இருந்தது. இதனால் கட்சியினர் கொடிக்கம்பத்தை தேடிய போது அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதியில் கிடந்தது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சத்திரப்பட்டியில் உள்ள திருச்சி-திண்டுக்கல் சாலையில் கட்சியின் ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் பொன்.முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், பொருளாளர் கண்ணன், பூபதி உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பிரபாகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொடிக்கம்பத்தை அகற்றியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story