உத்தமபாளையம் கால்வாயை சீரமைக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்


உத்தமபாளையம் கால்வாயை சீரமைக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2017 3:30 AM IST (Updated: 15 May 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் கால்வாயை சீரமைக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முல்லைப்பெரியாறு மூலம் பாசன வசதியை பெற்று வருகிறது. இங்குள்ள உத்தமபாளையம் உத்தமுத்து கால்வாய்க்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் சுமார் 1000 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் வறண்டன.

இதனால் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக காட்சி அளித்தது. இதனால் எப்போதும் இல்லாதவகையில், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரமைக்க கோரிக்கை

இந்த நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை பொறுத்தவரை முதல் போக விவசாயத்திற்கு, ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். எனவே இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

இந்தநிலையில் உத்தமுத்து கால்வாயில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் முட்செடிகள் மற்றும் புதர்கள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் கால்வாயின் கரை பகுதிகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தண்ணீர் திறக்கும் போது கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக வாய்ப்புள்ளது. எனவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பு கால்வாயை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story