கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத போலீஸ் குடியிருப்பு


கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத போலீஸ் குடியிருப்பு
x
தினத்தந்தி 15 May 2017 3:45 AM IST (Updated: 15 May 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் போலீஸ் குடியிருப்பு இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை என போலீசார் புலம்பி வருகின்றனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீசாருக்காக போலீஸ் குடியிருப்பு ஒன்று உள்ளது. ஆங்கிலேயேர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குடியிருப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்து வந்த போலீசார் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசிக்கத்தொடங்கினர்.

மேலும் சேதமடைந்த நிலையில் உள்ள குடியிருப்பை அகற்றிவிட்டு புதிய குடியிருப்பை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பழைய குடியிருப்பு பகுதியிலேயே புதிதாக போலீசாருக்கான குடியிருப்பை அமைக்க அரசு உத்தரவிட்டது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதற்கட்டமாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்காக 8 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுமான பணிகளும் விரைவில் நிறைவு செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு குடியிருப்புகளும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன் பின்னர் மேலும் 22 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு அந்த வீடுகள் அனைத்தும் திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றன. ஆனால் இதுவரை அந்த குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இது குறித்து உத்தமபாளையம் போலீசார் கூறுகையில், உத்தமபாளையத்தில் போலீசாருக்காக 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் கூடுதல் வாடகை கொடுத்து வெளியிடங்களில் நாங்கள் குடும்பத்தினருடன் வசிக்கும் நிலையே தற்போது வரை உள்ளது. எனவே விரைவில் போலீசாருக்காக குடியிருப்பை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story