வேடசந்தூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பாழடைந்த கிணற்றை தூர்வாரிய பொதுமக்கள்


வேடசந்தூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பாழடைந்த கிணற்றை தூர்வாரிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 May 2017 3:45 AM IST (Updated: 15 May 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலியாக பாழடைந்த கிணற்றை பொதுமக்கள் தூர்வாரினர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் ஊராட்சி நல்லபொம்மன்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரெங்கமலை மற்றும் கருமலை அடிவாரத்தில் அமைந்துள்ள, இந்த கிராமம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. இதுதவிர கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது. இது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

பொதுமக்கள் அவதி

கடந்த 4 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தண்ணீரை தேடி பொதுமக்கள் அலைந்து வருகின்றனர். வேலைக்கு கூட செல்லாமல் குடிநீர் வால்வுகளில் குடிநீரை பிடிக்கவே மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். அத்துடன் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாததால் அவைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தூர்வார முடிவு

இந்தநிலையில் இந்த பகுதியில் காளியம்மன்கோவில் அருகே 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் பொதுமக்கள் பயன்படுத்தாமல் கைவிட்டதால் பாழடைந்து போனது. கிணற்றில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாமல் போனது.

இதையொட்டி குடிநீருக்காக அந்த கிணற்றை பொதுமக்கள் தூர்வாரி ஆழப்படுத்த முடிவு செய்தனர். இதையொட்டி பொதுமக்கள் ஊர் கூட்டம் கூட்டி கிணற்றை தூர்வாருவது குறித்து ஆலோசனை நடத்தினர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க கிணற்றை பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தூர்வார முடிவு செய்தனர். கடந்த 3 நாட்களாக கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கிணற்றில் உள்ள குப்பைகள், மண்ணை அள்ளி வருகின்றனர்.

தூர்வாரும் பணி

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் பயன்படுத்திய கிணற்றை தூர்வார முடிவு செய்தோம். இதையொட்டி கடந்த 3 நாட்களாக கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

நிச்சயம் இந்த கிணற்றில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்றனர். 

Next Story