ஊட்டி படகு இல்லத்தில் உரிமம் இன்றி இயங்கிய 2 கடைகளுக்கு சீல் வைப்பு


ஊட்டி படகு இல்லத்தில் உரிமம் இன்றி இயங்கிய 2 கடைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 15 May 2017 4:00 AM IST (Updated: 15 May 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி படகு இல்லத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா?, கடைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டி படகு இல்லத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கடைகள் நகராட்சியிடம் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதையும் நகராட்சி அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

கடைகளுக்கு சீல்

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் கடை உரிமையாளர்கள் அபராத தொகை செலுத்த மறுத்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி அதிகாரிகளை, சில வியாபாரிகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் பிரபாகர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் படகு இல்லத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 2 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து நோட்டீஸ் கடையின் கதவில் ஒட்டப்பட்டது.

போலீசில் புகார்

இந்த சம்பவம் குறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் பிரபாகர் கூறியதாவது:- ஊட்டி நகராட்சிக்குட்பட்ட எந்தவொரு பகுதியில் கடை வைத்தாலும் நகராட்சியிடம் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெறாமல் கடைகள் இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஊட்டி படகு இல்லத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்படும்.

ஊட்டி படகு இல்லத்தில் நேற்று (நேற்று முன்தினம்) நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தபோது சில வியாபாரிகள் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 4 வியாபாரிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story