ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு


ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் சென்னிமலை ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை முற்றுகையிடுவதற்காக அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள், ‘வேண்டாம், வேண்டாம் டாஸ்மாக் கடை வேண்டாம், அகற்று அகற்று டாஸ்மாக் கடையை அகற்று’ என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அருள், சிவக்குமார், முருகன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட வந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

விளைநிலங்களுக்குள்...

அப்போது பெண்கள் கூறியதாவது:-

இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள முள்ளாம்பரப்பு, மேட்டுக்கடை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் மது அருந்த வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடையில் பார் வசதி இல்லாததால் குடிமகன்கள் மதுவை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள விளைநிலங்களுக்கு செல்கிறார்கள். அப்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களையும் அவர்கள் தங்களது கைகளில் கொண்டுசெல்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் விளைநிலங்களில் அமர்ந்து சாவகாசமாக மது அருந்துகிறார்கள். பின்னர் மதுபோதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு, பிளாஸ்டிக் பொருட்களையும் விளைநிலங்களிலே வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் மழை காலங்களில் பயிர்செய்ய முடியாத அளவுக்கு உடைந்த மது பாட்டில்களும், பிளாஸ்டிக் பொருட்களும் விளைநிலங்களில் நிறைந்து கிடக்கின்றன.

பரபரப்பு

மேலும் குடிமகன்களால் டாஸ்மாக் கடை அருகில் உள்ள கோவில்களுக்கு சாமி கும்பிட வரும் பெண்களும், பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற வரும் பொதுமக்களும் அச்சப்படுகிறார்கள். எனவே ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு போலீசார், ‘உங்களுடைய கோரிக்கை நியாயமானது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள். தற்போது டாஸ்மாக் கடையை முற்றுகையிடாமல் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் முத்தம்பாளையம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story