மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், ஈரோட்டில் நல்லகண்ணு பேட்டி


மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், ஈரோட்டில் நல்லகண்ணு பேட்டி
x
தினத்தந்தி 15 May 2017 4:45 AM IST (Updated: 15 May 2017 4:29 AM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஈரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம் சார்பில் கனிராவுத்தர் குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு நேற்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடங்கள் கட்டுதல், நீர் வழிப்பாதையை தடுத்தல் போன்றவையாகும். கனிராவுத்தர்குளத்தின் நடுவில் 110 வீடுகளுக்கு மேல் கட்டும் அளவுக்கு அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளனர். கோர்ட்டில் தடை ஆணை பெற்ற பிறகே தற்போது ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

கனிராவுத்தர் குளம்

தனியார் சார்பில் தற்போது கனிராவுத்தர் குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார ரூ.10 கோடி அனுமதித்து முதற்கட்டமாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அந்த தொகையை செலவிடாததால் பணம் திரும்பி சென்றது.

மணல் கொள்ளையை தடுக்க அரசு குழு அமைத்தது. அந்த குழு பரிந்துரைப்படி 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அரசே குவாரியை ஏற்று நடத்தும் என அறிவித்தது. ஆனால் மணல் சேகரிப்பு மையங்களை கையில் வைத்துக்கொண்டு தனியார் சிலர் ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி வரை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினர்.

போக்குவரத்து ஊழியர்கள்

தற்போது புதிதாக 25 குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே மணல் கொள்ளையர்கள் செய்த அட்டகாசம் போல் இல்லாமல் இயற்கையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்கள், தங்களுக்கு வரவேண்டிய பண பலன், ஓய்வூதியம் போன்ற நிலுவைத்தொகைகளை வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். தற்போது போராட்டத்தை முன் கூட்டியே அறிவித்து தொடங்கி உள்ளனர். அவர்களது நிலுவை தொகையை ஒரே நேரத்தில் வழங்கிவிட்டு, பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு கூறினார்.

அப்போது அவருடன் வக்கீல் ப.பா.மோகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துளசிமணி, கனிராவுத்தர் குளம் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் நிலவன் உள்பட பலர் இருந்தனர். 

Next Story