திருப்பரங்குன்றத்தில் மாற்று டிரைவர் இயக்கிய அரசு பஸ் தாறுமாறாக ஓடியது சுவரில் உரசியதால் பக்கவாட்டு தகரம் பெயர்ந்தது


திருப்பரங்குன்றத்தில் மாற்று டிரைவர் இயக்கிய அரசு பஸ் தாறுமாறாக ஓடியது சுவரில் உரசியதால் பக்கவாட்டு தகரம் பெயர்ந்தது
x
தினத்தந்தி 16 May 2017 4:15 AM IST (Updated: 15 May 2017 11:11 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றத்தில் மாற்று டிரைவர் இயக்கிய அரசு பஸ் தாறுமாறாக ஓடி, சுவரில் உரசியதில், பஸ்சின் பக்கவாட்டு தகரம் பெயர்ந்தது.

சோழவந்தான்,

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் பல தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் வாடிப்பட்டி–சோழவந்தான் சாலையில் சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய முற்பட்டனர். தகவறிந்த சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ்சோபியாபாய் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சாலையில் நின்றிருந்த சி.ஐ.டி.யூ மத்திய தொழிற்சங்க துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், கிளைச் செயலாளர் ராஜ்குமார், தொ.மு.ச. நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், சிவசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 96 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 6 மாற்று பஸ்கள் உள்ளன. நேற்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி 36 பஸ்கள் மட்டு இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்களை தனியார் வாகன டிரைவர்களை வைத்து இயக்க வைத்தனர்.

இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, பொதுக்குழு உறுப்பினர் தனராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அந்த கட்சியை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களை பணிக்கு வருமாறு அழைத்தனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு மேல் 7 பஸ்கள் இயக்கப்பட்டன. பிறகு 10 மணியளவில் மேலும் 6 பஸ்கள் இயங்கின. இந்த பணிமனையில் மொத்தம் உள்ள 68 பஸ்களில், 13 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 121 பேரில், 26 பேர் மட்டும் பணிக்கு வந்தனர். இந்தநிலையில் மதியம் 2 மணிக்கு மேல், ஏற்கனவே இயக்கப்பட்ட 13 பஸ்களையும் பணிமனையில் கொண்டு வந்த நிறுத்தி விட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் தனியார் கல்லூரி வாகன டிரைவர்கள், தனியார் வாகன டிரைவர்கள் என 12 பேர் வரவழைக்கப்பட்டு, 12 பஸ்கள் மட்டும் இயங்கின.

அதில் மதுரைக்கு செல்வதற்காக, தனியார் வாகன டிரைவர் (மாற்று) அரசு பஸ்சை பணிமனையில் இருந்து பஸ்சை எடுத்து இயக்கினார். அப்போது பஸ் தாறுமாறாக ஓடி அங்குள்ள சுவரில் மோதுவது போல வந்து, அதில் உரசியபடி சென்றது. அதில் பஸ்சின் பக்கவாட்டு தகரம் பெயர்ந்தது. இருப்பினும் அதே டிரைவர் தான், அந்த பஸ்சை ஓட்டி சென்றார். இவர்களால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 428 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஹார்விப்பட்டி பஸ்நிறுத்தத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஒருவர், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் வேலை நிறுத்தை யாரும் தடுக்கக் கூடாது என்று குரல் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து வந்த போலீசார் அவரை சமாதனம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story