இளையான்குடி அருகே நகரக்குடி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பாரபட்சம் விவசாயிகள் புகார்


இளையான்குடி அருகே நகரக்குடி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பாரபட்சம் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 15 May 2017 11:42 PM IST (Updated: 15 May 2017 11:41 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே நகரக்குடியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ளது நகரக்குடி. இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குமாரக்குறிச்சி, பெரும்பச்சேரி, சுந்தனேந்தல், மொச்சனேந்தல், நகரக்குடி, ஆழிமதுரை, வாணி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு தேவையான பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றனர். மேலும் அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உள்ளிட்டவற்றிற்கும் கூட்டுறவு சங்கத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் இந்த கூட்டுறவு சங்கத்தில் பயனடைந்து வருகின்றனர்.

பாரபட்சம்

ஆனால் இந்த கூட்டுறவு சங்கத்தில் சமீப காலமாக ஏழை விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்டவை வழங்கப்படுவது இல்லை என்று விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் பாரபட்சம் பார்த்து, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குமாரக்குறிச்சி, பெரும்பச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் அவர்கள் தாசில்தார், மாவட்ட கலெக்டருக்கு தங்களது புகாரை மனுவாக அளித்துள்ளனர்.

சிபாரிசு இருந்தால் கடன்

இதுகுறித்து விவசாயி சந்திரன் என்பவர் கூறும்போது, நகரக்குடி கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுகின்றனர். வசதி படைத்தோருக்கு மட்டுமே கடன் வழங்குகின்றனர். இதனால் ஏழை விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில்லை. பட்டா வைத்து கடன் வழங்கினால் அரசு வழங்கும் சலுகை அளிக்கப்படும். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் ஏழை விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பட்டாவை பதியாமல், பொதுக்கடன் வழங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் கிடைப்பது இல்லை. மேலும் சிபாரிசு இருந்தால் தான் கடன் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளனர் என்றார்.

Next Story