போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கம் கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கம் கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

தர்மபுரி,

அரசு போக்குவரத்துகழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் நேற்று நிறுத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் மிகக்குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இதனால் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயணிகள் போதிய போக்குவரத்து வாகன வசதியின்றி பாதிக்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் புறநகர் பஸ்களை இயக்க கலெக்டர் விவேகானந்தன் மேற்பார்வையில் போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் தர்மபுரி பஸ்நிலையத்திற்கு நேற்று காலை 25–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டன. இந்த பஸ்கள் சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருப்பத்தூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு அவ்வப்போது புறப்பட்டு சென்றன. அதே நேரத்தில் தனியார் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன. தனியார் பஸ்களில் வழக்கத்தைவிட அதிக பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மினி பஸ்கள், ஆம்னி பஸ்களும் சில இடங்களில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

அதிகாரிகள் கண்காணிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் 356 அரசு பஸ்கள் உள்ளன. இவற்றில் நேற்று 20 முதல் 25 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு பஸ்களை இயக்கும் பணியில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள் கணிசமாக ஈடுபட்டனர். இதேபோல் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள இளைஞர்களும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த டிரைவர்களும் அரசு பஸ்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதை அரசு அதிகாரிகள் கண்காணித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் வெளியாட்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்படுவதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு பஸ் டிரைவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், அரசு பஸ்களின் தரநிலை குறித்து அந்த பஸ்களை தொடர்ந்து இயக்கும் டிரைவர்களுக்கே நன்றாக தெரியும். இந்த நிலையில் அரசு பஸ்களை வெளியாட்களை வைத்து இயக்குவது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும். எனவே பொதுமக்கள், பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று தெரிவித்தனர்.

செருப்பு வீச்சு

இதேபோன்று அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், பாலக்கோடு, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளின் வசதிக்காக தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த டிரைவர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொம்மிடி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று பையர்நத்தம் நோக்கி சென்றது. அப்போது மர்ம கும்பல் ஒன்று பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது செருப்பை வீசினர். இதனால் டிரைவர் பஸ்சை திருப்பிக்கொண்டு மீண்டும் பொம்மிடி போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்றார். ஏரியூர், நெருப்பூர், பெரும்பாலை வழியாக மேச்சேரிக்கு குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

கிருஷ்ணகிரி

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி நேற்று முன்தினம் மாலையிலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். நேற்றும் போராட்டம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை.

இதையடுத்து தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த டிரைவர்கள் மூலம் அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் குறைந்த அளவிலேயே டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. ஆனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்ததால் பயணிகள் சிரமமின்றி சென்று வந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரிதவிப்பு

ஓசூரிலும் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் தினமும் பணி நிமித்தமாக பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இயக்கப்பட்ட ஒரு சில பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவர்கள் பரிதவித்தனர்.

இந்த நிலையில் காலை 11 மணிக்கு பிறகு தமிழக அரசு பஸ்கள் மாற்று டிரைவர் மற்றும் கண்டக்டர்களை கொண்டு இயக்கப்பட்டன. ஓசூரிலிருந்து கிராமப்புற பகுதிகளுக்கு டவுன் பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு புறநகர் மற்றும் தொலைதூர பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால் இதில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதனிடையே மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா செந்தில்ராஜ் உடனிருந்தார்.

இதே போல மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசு பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 70 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. ஆனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாததால் அவர்கள் சிரமமின்றி சென்று வந்தனர்.

Next Story