பழனியில் பள்ளி நிர்வாகி மற்றும் அவருடைய உறவினரை படுகொலை செய்த கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
பழனியில் பள்ளி நிர்வாகி மற்றும் அவருடைய உறவினரை படுகொலை செய்த கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒட்டன்சத்திரம் சாலையில் சுற்றுலா பயணிகள் விடுதிக்கு எதிரே வசித்து வந்தவர் நாராயணசாமி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருடைய மனைவி தனுஷ் (வயது 40). இவர் பழனி அருகே கலையமுத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகியாக இருந்தார். இவர், தன்னுடைய மகளுடன் பாலசமுத்திரம் அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். அவர்களுடன், தனுசின் தந்தை அய்யப்பன், உறவினரான செந்தில்குமார் (40) ஆகியோரும் தங்கி இருந்தனர்.
அந்த வீட்டில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முத்துநகரை சேர்ந்த காளஸ்வரன் (41) என்பவர் கார் டிரைவராக இருந்தார். அவர் தனுசின் மகளை காரில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு, பண்ணை வீட்டுக்கு அருகே தனியாக ஒரு அறை கொடுக்கப்பட்டு இருந்தது.
இரட்டை கொலை
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி செந்தில்குமார், தனுஷ் ஆகியோர் பண்ணை வீட்டில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அந்த வீட்டில் இருந்த ரூ.23 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பள்ளி மாணவியான தனுசின் மகளும் கடத்தப்பட்டார்.
இந்த இரட்டை கொலை சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் அரங்கேறிய இரட்டைக்கொலை, சிறுமி கடத்தல், பணம் கொள்ளை தொடர்பாக பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, கார் டிரைவர் காளஸ்வரன் மாயமானார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. விசாரணையில் அவர்தான் தனுஷ், செந்தில்குமார் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது. அவர் சிறுமியை கடத்தி சென்றதையும் கண்டுபிடித்தனர்.
கார் டிரைவர் கைது
பிறகு, தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கிய போலீசார், அதே ஆண்டு ஜூன் மாதம் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் சிறுமியுடன் பதுங்கி இருந்த கார் டிரைவர் காளஸ்வரனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியை பத்திரமாக மீட்டனர். காளஸ்வரன் கொள்ளையடித்த பணத்தில் ரூ.17½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை பரபரப்பில் ஆழ்த்திய இந்த இரட்டைக்கொலையை பணத்துக்காக அரங்கேற்றியதாக காளஸ்வரன் வாக்குமூலம் அளித்தார்.இதற்கிடையே, அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவு 4-ன் கீழ் காளஸ்வரன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
3 ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், பரபரப்பான தீர்ப்பு விவரத்தை நீதிபதி கருணாநிதி நேற்று அறிவித்தார்.
அதன்படி, காளஸ்வரனுக்கு 3 ஆயுள் தண்டனை, 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவர் தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.6 ஆயிரம் அபராதமும், அந்த தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனை காலங்கள் அனைத்தையும் ஏக காலங்களில் அனுபவிக்கும்படி தன்னுடைய தீர்ப்பில் நீதிபதி தெரிவித்து இருந்தார்.