மேட்டுப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் புதுப்பெண் கத்தியால் குத்திக்கொலை


மேட்டுப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் புதுப்பெண் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 16 May 2017 5:00 AM IST (Updated: 16 May 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் புதுப்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் உதயா (வயது 20). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஆனந்தி (18). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இருந்தபோதிலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆனந்தி சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கம். பின்னர் சிறிது நாள் கழித்து உதயா அவரை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வருவார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட உதயா, குடும்பம் நடத்த தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் ஆனந்தி வர மறுத்துள்ளார். இதனால் ஆனந்தி மீது உதயாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது

பஸ்சில் ஏறினார்

இதையடுத்து, ஆனந்திக்கு நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதற்காக அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. எனவே நேற்று காலையில் அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக ஆனந்தி நேற்று காலை 10 மணிக்கு தனது தாயாருடன் சிறுமுகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். இதற்கிடையே, ஆனந்திக்கு தெரியாமல், அவரை பின்தொடர்ந்து சென்ற உதயா, அதே பஸ்சில் ஏறி மேட்டுப்பாளையத்துக்கு செல்ல டிக்கெட் எடுத்துள்ளார்.

சரமாரியாக கத்திக்குத்து

அந்த பஸ் மேட்டுப்பாளையம் பவர் ஹவுஸ் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த உதயா, எழுந்து தனது மனைவி ஆனந்தி அமர்ந்து இருந்த இருக்கை அருகே சென்றார். பின்னர் அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தனது மனைவி என்றும் பாராமல், ஆனந்தியின் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

இதைப்பார்த்ததும் அந்த பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டதும், டிரைவர் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தினார். அப்போது பஸ்சுக்குள் இருந்த உதயா கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆனந்தியை அந்த பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் மீட்டு, சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார், அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, ஆனந்தியின் தாயார் கமலவேணி மற்றும் அந்த பஸ்சுக்குள் அமர்ந்து இருந்த மற்ற பயணிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய உதயாவை வலைவீசி தேடி வருகிறார்கள். தன் கண் முன்னே மகளை, மருமகனே கத்தியால் குத்திக்கொலை செய்ததை பார்த்த கமலவேணி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண்ணை அவருடைய கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story