பஸ்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ராஜேஷ் எச்சரிக்கை


பஸ்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ராஜேஷ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 May 2017 1:06 AM IST (Updated: 16 May 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பஸ்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கடலூர்,

போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறதா? வெளியூர் பஸ்கள் வந்து செல்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர், அங்கிருந்த பயணிகளிடம் தாங்கள் ஊருக்கு செல்வதற்கு தடையின்றி பஸ்கள் இயக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். அதற்கு பஸ்கள் இயக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீஸ் பாதுகாப்பு

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 591 பஸ்களில் 241 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 241 நகர பஸ்களில் 163 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 11 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமானால் கூடுதல் பஸ்களை இயக்கி அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர தனியார் பஸ்கள் 100 சதவீதம் இயங்கி கொண்டிருக்கின்றன. பாதுகாப்பை பொறுத்தவரை காவல்துறை, வருவாய்த்துறை சார்பில் குழு அமைத்து நேற்று(அதாவது நேற்று முன்தினம்) இரவு முதல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 4 இடங்களில் பஸ்களை சேதப்படுத்தியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை

நெய்வேலி பகுதியில் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சென்றுள்ளார். மேலும் கோட்டாட்சியர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் என அனைவரும் குழு அமைத்து முழு ஒருங்கிணைப்புடன் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படா வண்ணம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீதும், பஸ்களை சேதப்படுத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story