தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்களை பயன்படுத்தி 100 சதவீதம் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு


தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்களை பயன்படுத்தி 100 சதவீதம் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 16 May 2017 3:45 AM IST (Updated: 16 May 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்களை பயன்படுத்தி 100 சதவீதம் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்களை பயன்படுத்தி 100 சதவீதம் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சிறப்பான முன்னேற்பாடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திருப்பூர் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி முன்னிலை வகித்தார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழகத்தில் சில தொழிற்சங்கங்களால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பஸ்களை சீரான முறையில் இயக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்கள்

மாவட்டத்தில் தங்கு தடையின்றி பஸ்களை இயக்குவதற்கு போதுமான அளவு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 62 சதவீதம் பஸ்கள் இன்று(நேற்று) இ்யக்கப்பட்டன. நாளை(இன்று) முதல் திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கேயம் மற்றும் உடுமலை ஆகிய அரசு பணிமனைகளில் உள்ள பஸ்களுக்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலமாக 100 சதவீதம் முழுமையான முறையில் பஸ்களை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பணிமனைகளுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல், சப்-கலெக்டர்கள் ஷ்ரவன் குமார்(திருப்பூர்), கிரேஸ் பச்சுவா(தாராபுரம்), உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், அனைத்து தாசில்தார்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story