முன்னாள் முதல் அமைச்சர் எஸ்.ராமசாமி மரணம், நாராயணசாமி அஞ்சலி


முன்னாள் முதல் அமைச்சர் எஸ்.ராமசாமி மரணம், நாராயணசாமி அஞ்சலி
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எஸ்.ராமசாமி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ராமசாமி (வயது 83). வானரப்பேட்டை மெயின்ரோட்டில் வசித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால் நேற்று காலை அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை.

அவரது குடும்பத்தினர் எழுப்ப முயன்றபோது தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு ராமசாமி மரணமடைந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வானரப்பேட்டையில் உள்ள வீட்டில் அவரது உடல் நேற்று காலை முதல் பொதுமக்கள் அசலிக்காக வைக்கப்பட்டது.

அஞ்சலி செலுத்தினர்

ராமசாமியின் உடலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.ராமசாமியின் சொந்த ஊர் காரைக்கால் ஆகும். புதுவையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று இரவு அவரது உடல் காரைக்காலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வீராசாமி நாயுடு தெருவில் உள்ள பூர்வீக வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. நாளை (புதன்கிழமை) காலை 8 மணியளவில் அரசு மரியாதையுடன் ராமசாமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. எஸ்.ராமசாமிக்கு ஆனந்தி என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சிறப்பு அழைப்பாளர்

ராமசாமி தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவருக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது ராமசாமி அந்த கட்சியில் இணைந்தார். 1974-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவையில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-அமைச்சராக பதவி விகித்தார்.

பதவி ஏற்று 22-வது நாளில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. ஆனால், முன்கூட்டியே பட்ஜெட் விவரங்கள் கசிந்து விட்டன. அ.தி.மு.க.வில் இருந்து பல எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவினர். இதனால் முதல் அமைச்சராக பதவி ஏற்ற 22-வது நாளிலேயே ராமசாமி ஆட்சி கவிழ்ந்தது. அப்போது அவர் 6.3.1974 முதல் 28.3.1974 வரை மட்டுமே அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

அடுத்து 1977ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எஸ்.ராமசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார். அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மாறியதால் 15 மாதத்தில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதாவது 2.7.1977 முதல் 12.11.1978 வரை முதல்-அமைச்சர் பதவியில் ராமசாமி இருந்தார்.

பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் மக்கள் முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியிலும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளுக்கு பிறகு கட்சியில் இருந்து விலகினார். சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

4 முறை எம்.எல்.ஏ.

காரைக்கால் தெற்கு தொகுதியில் இவர் 4 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வக்கீலுக்கு படித்த அவர், சிறந்த அரசியல் ஞானம் உள்ளவர். சட்டசபையில் சிறப்பாக வாதாடும் திறமை பெற்றவர். தமிழ்நாட்டிலும், அகில இந்திய அளவிலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்தார். 

Next Story