புதுவையில் பஸ் நிலையம் வெறிச்சோடியது, பயணிகள் கடும் அவதி


புதுவையில் பஸ் நிலையம் வெறிச்சோடியது, பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 16 May 2017 4:45 AM IST (Updated: 16 May 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் புதுவையில் பஸ் நிலையம் வெறிச்சோடியது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

புதுச்சேரி

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் தமிழக அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை. அவை அனைத்தும் அந்தந்த பகுதியில் உள்ள பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் புதுவையில் இருந்து சென்னை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திண்டிவனம், வேலூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

பயணிகள் ஏமாற்றம்

வாரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதிகாலையில் புதுவையில் இருந்து சென்னைக்கு ஏராளமான இளைஞர்களும், பெண்களும் பணிக்குச் செல்வது வழக்கம். நேற்று தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை என்பதால் அதிகாலையில் புதிய பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றத்துடன் பஸ் நிலையத்தில் காத்து நின்றனர்.

புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழக பஸ்கள் நேற்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டன. இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் தவிர மற்றவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறி பஸ்சில் நின்ற படியே பயணம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

உப்பளத்தில் உள்ள தமிழக அரசு பஸ் பணிமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். இதில் சிவக்குமார், சந்திரன், ரகோத்தமன், இளவரசன் மற்றும் 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க உப்பளம் பணிமனை, புதிய பஸ்நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வாகனங்கள்

புதுவையில் தமிழக பஸ்கள் ஓடாதநிலையில் புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் வேன்கள், கார்கள், டெம்போக்கள் வந்து குவிந்தன. இரவு நேரம் என்பதால் எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து பொதுமக்கள் சென்னைக்கு பயணம் செய்தனர். இதனால் இந்த வாகனங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

தனியார் பஸ்களும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றன. சாதாரண பஸ்கள் தான் என்றாலும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் வசூலித்தனர். பொதுமக்களும் வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தை கொடுத்து அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.

புதுவையில் இருந்து சென்னை சென்ற ரெயிலிலும் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள்.

Next Story