133 அடி உயர சிலைக்கு பராமரிப்பு பணி நடப்பதால் கடற்கரையில் வேறுசிலை வைத்து திருவள்ளுவருக்கு மரியாதை


133 அடி உயர சிலைக்கு பராமரிப்பு பணி நடப்பதால் கடற்கரையில் வேறுசிலை வைத்து திருவள்ளுவருக்கு மரியாதை
x
தினத்தந்தி 16 May 2017 4:15 AM IST (Updated: 16 May 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு பராமரிப்பு பணி நடந்து வருவதால், கடற்கரையில் ஆள் உயர சிலையை ஒரு வாகனத்தில் வைத்து திருவள்ளுவருக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை செலுத்தினார்கள். திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உள்ளது. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கு பின்பு ஆண்டுதோறும் வைகாசி 1–ந் தேதியன்று தமிழ் அறிஞர்கள் கன்னியாகுமரியில் கூடி திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

தற்போது 133 அடி உயர திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. உப்புக்காற்றால் சேதம் ஏற்படாமல் இருக்க திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படுகிறது. அதற்காக திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் சாரம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது சிலை உயரத்துக்கு பிரமாண்டமாக சாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சிலை பராமரிப்பு பணியையொட்டி அங்கு செல்ல தடை உள்ளது.

நேற்று வைகாசி மாதம் 1–ந் தேதி என்பதால் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த திருவள்ளுவர் அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் வந்திருந்தனர். ஆனால், கடல் நடுவே இருக்கும் சிலைக்கு செல்ல முடியாது என்பதால், அவர்கள் தற்காலிகமாக வேறு ஒரு ஏற்பாட்டை செய்திருந்தனர்.

ஆள் உயர சிலை


அனைவரும் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரையில் ஒண்சுடர் நினைவுத்தூண் பகுதியில் திரண்டனர். ஒரு வாகனத்தில் ஆள் உயர திருவள்ளுவர் சிலையை வைத்து அங்கு கொண்டு வந்தனர். அந்த சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கினார். வக்கீல் டிமிற்றிலால், ஜோசப் பெர்னான்டஸ், திருவள்ளுவர் கலைக்கூடத்தின் நிறுவனர் சினிமா டைரக்டர் வி.சேகர், நடிகர் கார்ல்மார்க்ஸ் உள்பட பலர் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

1,330 திருக்குறள்களையும் முற்றோதுதல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி லீபுரத்தில் இருந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரை தமிழ் அறிஞர்கள் பங்கேற்ற பேரணியும் நடந்தது.


Next Story