தற்காலிக டிரைவர், கண்டக்டர் தேர்வு பணி தீவிரம் கோவையில், 10 சதவீத அரசு பஸ்களே ஓடின


தற்காலிக டிரைவர், கண்டக்டர் தேர்வு பணி தீவிரம் கோவையில், 10 சதவீத அரசு பஸ்களே ஓடின
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 16 May 2017 8:47 PM IST)
t-max-icont-min-icon

தற்காலிக டிரைவர், கண்டக்டர் தேர்வு பணி தீவிரம் கோவையில், 10 சதவீத அரசு பஸ்களே ஓடின தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன

கோவை,

அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கோவையில் நேற்று 10 சதவீத அரசு பஸ்களே ஓடின. இதனால் கோவையில் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்


ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். கோவையில் முதல் நாளான நேற்று முன்தினம் 40 சதவீத அரசு பஸ்கள் ஓடின. ஆனால் நேற்று அது குறைந்து 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே ஓடின.

இந்த நிலையில் நேற்றுக்காலையில் கோவையில் உள்ள 17 டெப்போக்கள் முன்பும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து அனைத்து டெப்போக்கள் முன்பும் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கூடுதலாக தனியார் பஸ்கள்


கோவையை பொறுத்தவரை அனைத்து வழித்தடங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடினாலும் கிராமப்புறங்களில் அரசு பஸ்கள் தான் அதிகமாக ஓடின. ஆனால் அந்த வழித்தடங்களில் அரசு பஸ்கள் ஓடாததால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் கிராமங்களில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருபவர்கள் ஆட்டோ மற்றும் வேன்கள் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி வந்தனர். கோவையில் நேற்று அரசு பஸ்களுக்கு பதிலாக தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

 இதுகுறித்து கோவை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரை கண்ணன் கூறும் போது, கோவை மாவட்டத்தில் 450 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசு பஸ்கள் இயக்கப்படாததால் எங்களிடம் கூடுதலாக உள்ள பஸ்களை இயக்குமாறு அரசு நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதால் கூடுதலாக 130 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.

மினி பஸ்கள்


இதே போல கோவையில் பயணிகளின் சிரமத்தை குறைக்க மினி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்கள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் எந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினார்கள்.

கோவையிலிருந்து மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு இதுவரை அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த வழித்தடங்களில் அரசு பஸ்கள் ஓடாததால் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து கோவை மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிராவல்ஸ் சங்க தலைவர் ஸ்டீபன் கூறுகையில்,‘வெளியூர்களிலிருந்து அதிகாலையில் வரும் ஆம்னி பஸ்களை நாங்கள் கோவையிலிருந்து மதுரை, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு இயக்கி வருகிறோம். அந்த பஸ்கள் கோவைக்கு இரவில் திரும்பி வந்ததும் வழக்கமான வழித்தடத்தில் வெளியூர்களுக்கு அந்த பஸ்கள் செல்கின்றன. பெர்மிட் இல்லாமல் எந்த பஸ்சும் இயக்கப்படுவதில்லை என்றார்.

கூடுதல் கட்டணம்


கோவையிலிருந்து சேலம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பஸ் டிரைவர்கள் கூறுகையில், ‘வெளியூர் செல்லும் பஸ்களில் உள்ள இருக்கையை விட ஆம்னி பஸ்களில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைவு. அதை சமாளிக்கத் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்றனர். ஆனால் ஒரு சில தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.

கோவையில் அரசு பஸ்கள் மிகவும் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் தனியார் பஸ்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. அனைத்து தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் கிராமப்பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அங்கிருந்து கோவைக்கு தினமும் வேலைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி ஆகிய பஸ் நிலையங்களில் டவுன் பஸ் மற்றும் வெளியூர் பஸ்களுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நீண்ட நேர இடைவெளியில் வந்த பஸ்சில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு தான் ஏறினார்கள். பயணிகள் வருகை குறைந்ததால் காந்திபுரத்தில் உள்ள கடைகள், நடை பாதை கடைகளில் வியாபாரம் குறைந்தது.

விரைவு பஸ்கள் எண்ணிக்கை குறைந்தது


கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு, கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 60 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அவற்றை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள் வராததால் நேற்று குறைந்த எண்ணிக்கையிலான விரைவு பஸ்களே இயக்கப்பட்டன.வெளி மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஓடாததால் தனியார் ஆம்னி பஸ்களில் கூட்டம் அலைமோதியது. கோவையிலிருந்து நேற்று இரவு வெளியூருக்கு சென்ற அனைத்து ஆம்னி பஸ்களிலும் இடம் இல்லை.

கோவையிலிருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் ஓடாததால் ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோவை–சென்னை, கோவை–பாலக்காடு, கோவை–மேட்டுப்பாளையம், கோவை–ஈரோடு ஆகிய ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டநெரிசலை தவிர்க்க கோவையிலிருந்து இன்று(புதன்கிழமை)காலை 8 மணிக்கு சென்னைக்கு சிறப்பு ரெயில் விடப்படுகிறது என்று கோவை ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

காட்சி பொருளான அரசு பஸ்கள்


 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

தற்போது பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் பஸ் பயணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு காரணம் அனுபவம் இல்லாத டிரைவர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்கியதால் சில இடங்களில் விபத்துக்கள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இது பற்றி தெரியவந்ததும் பொதுமக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்கிறார்கள். குறிப்பாக வெளியூர் பயணத்தை பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகிறார்கள். மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் உள்ளூரில் டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு காரணம் வேலைக்கு செல்பவர்கள் பொருட்களை வாங்குபவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டியது இருக்கிறது.

போதிய டிரைவர்கள் இல்லாததால் ஒரு டிரைவரே சில பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வந்து பஸ் நிலையங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். பஸ் நிலையங்களில் அரசு பஸ்களே இல்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காக அரசு போக்குவரத்து அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் காட்சிக்காக நிறுத்தப்பட்ட அந்த பஸ்களில் பயணிகள் யாரும் ஏறவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தற்காலிக டிரைவர்–கண்டக்டர்கள்


இதற்கிடையே அரசு பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றிய பஸ், வேன் டிரைவர்கள் வேலையில்லாமல் தான் உள்ளனர். எனவே அவர்களை தேர்வு செய்து அரசு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களை கொண்டு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று 130 டிரைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்டக்டர்களை தேர்வு செய்வதற்காக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதில் உள்ளவர்களை வரவழைத்து பயிற்சி அளித்து பணியமர்த்த உள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட உள்ளது. நேற்று மாலை வரை கோவை மாவட்டத்தில் 130 தற்காலிக டிரைவர்கள், 15 கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story