மாவட்டம் முழுவதும் பஸ்கள் வழக்கம்போல் ஓடின போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டம் முழுவதும் பஸ்கள் வழக்கம்போல் ஓடின போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 8:48 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று 2–வது நாளாக நீடித்தாலும், நாமக்கல் மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

நாமக்கல்,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13–வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள பணபலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,297 போக்குவரத்து தொழிலாளர்களில் 847 பேர் மட்டுமே நேற்று வேலைக்கு வந்து இருந்தனர். 1,450 பேர் வேலைக்கு வரவில்லை. இருப்பினும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களின் டிரைவர்கள் உதவியுடன் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. நடத்துனர் பற்றாக்குறையால் ஒருசில பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. அனுபவம் இல்லாத நபர்கள் அரசு பஸ்களை இயக்கியதால் ஒருசில இடங்களில் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டன. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைவான பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கல் போல் இயக்கப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு பஸ்நிலையம், பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிங்காரம், தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன நிர்வாகி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நாமக்கல் நகர தி.மு.க. பொறுப்பாளர் மணிமாறன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி தனசேகரன், மேற்பார்வையாளர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பேசினர். முடிவில் செல்வராஜன் நன்றி கூறினார்.

ராசிபுரம்–திருச்செங்கோடு

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கத்தினர் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று அரசு முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க தலைவர் சின்னுசாமி தலைமையில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களும், அனைத்து சங்கத்தினரும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணியளவில் திருச்செங்கோடு தாசில்தார் அலுவலக வாயிலில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும் சூரியகுமார் தலைமையில் கோ‌ஷம் போட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story