எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ரூ.1.31 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ரூ.1.31 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 16 May 2017 8:51 PM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானத்தி, கூத்தம்பூண்டி, மோளியப்பள்ளி, உஞ்சனை, அகரம், கொன்னையார், கோக்கலை, தொண்டிப்பட்டி, அக்கலாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக செம்மக்காட்டுப்புதூரில் ஒன்றிய பொது நிதித்திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து பைப்லைன் பொருத்தி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் பணியினையும், இதே ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மானத்தி மயானம் முதல் குட்டை வரை வாய்க்கால் தூர் வாரப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

மேலும் கூத்தம்பூண்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கூத்தம்பூண்டி தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணி, மோளியப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணி என எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அனைத்து பணிகளையும் தரமாகவும், குறிப்பட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சிட்டிபாபு, ஓன்றிய பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர் செந்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பணி மேற்பார்வையாளர்கள் பசுபதி, அறிவழகன் உள்பட வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story