திருப்பூர் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


திருப்பூர் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 May 2017 4:00 AM IST (Updated: 16 May 2017 9:10 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்


திருப்பூர் அம்மாபாளையம் ராக்கியாபாளையத்தை அடுத்த சொர்ணபுரி ரிச்லேண்ட் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள 2 தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் 500–க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நிலையில் அங்குள்ள தில்லைநகர் பகுதியில் நேற்று புதிய டாஸ்மாக் கடை திறப்பதாக அந்த பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை சொர்ணபுரி ரிச்லேண்ட் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த கடையை முற்றுகையிட்டு கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கடையின் கட்டிட உரிமையாளர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை


அப்போது, இந்த பகுதியில் ஏற்கனவே மர்ம ஆசாமிகள் மதுகுடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் அந்த வழியாக பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல முடியாது. எனவே டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கட்டிட உரிமையாளரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

இதை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story