முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடும் தாக்கு “ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி அரசு மண்டியிட்டுக் கிடக்கிறது”


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடும் தாக்கு “ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி அரசு மண்டியிட்டுக் கிடக்கிறது”
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

பதவியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு விதி விலக்கு கோரி சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீட் தேர்வு குறித்து பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு இந்தி திணிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை என்ஜினீயருக்கும், டாக்டருக்கும் படிக்க வைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத சாதியை தெரிந்து கொள்வதில் நம்மில் உள்ள ஆர்வம் தமிழ்மொழி மீது பற்று கொள்வதில் இல்லை. தமிழ் மொழியை செம்மொழி ஆக்குவதில் பரிதிமாற் கலைஞருக்கு பிறகு கலைஞரால் தான் முடிந்தது.

தற்போது தமிழகத்தின் முதல்–அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நலன் மீதும், மாணவ சமுதாய வளர்ச்சி மீதும் அக்கறை இல்லை. பிளஸ்–2 தோவு மதிப்பெண்களை வைத்து மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்வது என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னாச்சு என்று தெரியவில்லை.

கேட்டது உண்டா?

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது எங்கே இருக்கிறது? அதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கேள்வி கேட்டது உண்டா? தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிய போஸ்ட் மேனாகத்தான் முதலமைச்சர் இருக்கிறார்.

சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் மாணவர்களின் மீது அக்கறை கொண்டு நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் பேசினாரா? பதவியையும், ஆட்சியையும் காப்பாற்ற மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி அரசு மண்டியிட்டு கிடக்கிறது. இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார், அண்ணா, கலைஞர் போராடினார்கள். மறைமுகமாக இந்தியை திணித்து சமஸ்கிருதத்தை கொண்டு வரும் முயற்சி மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் முன்னாள் மேயர் குழந்தைவேலு நன்றி கூறினார்.

Next Story