காஞ்சீபுரம் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு


காஞ்சீபுரம் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2017 4:00 AM IST (Updated: 17 May 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி 24-ந் தேதி சாமி தரிசனம்: காஞ்சீபுரம் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

காஞ்சீபுரம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற24-ந் தேதி சாமி தரிசனம் செய்வதையொட்டி காஞ்சீபுரம் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி ஆய்வு மேற்கொண்டார்.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 24-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஏகம்பரநாதர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரம் கோவில்களுக்கு வருவதையொட்டி சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் வீரசண்முகமணி காஞ்சீபுரம் வந்தார். அவரை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், வரதராஜபெருமாள் கோவில் நிர்வாக அதிகாரியுமான விஜயன், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாக அதிகாரி முருகேசன் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு தரிசன ஏற்பாடுகள்

ஆணையர் வீரசண்முகமணி, ஜனாதிபதி செல்லும் கோவில்களுக்கு சென்று சிறப்பு தரிசன ஏற்பாடுகள் குறித்தும், அவர் கோவிலுக்குள் வந்து செல்லும் வழிகள் குறித்தும் ஆய்வு செய்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரத்தில் உள்ள கோவில்களில் பேட்டரி கார் மூலம் சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆந்திரா கவர்னர் நரசிம்மன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் வருகை தருகின்றனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் காஞ்சீபுரம் வருகையையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

Next Story