மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை மதுவை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்

மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

முற்றுகை


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று ஊத்துக்கோட்டை வட்டம் தும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டாரெட்டிக்குப்பத்தை சேர்ந்த சுமார் 200–க்கும் மேற்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கையில் மதுபாட்டில்களை வைத்திருந்தனர். தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என கூறி மதுவை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

 இது பற்றி தொட்டாரெட்டிக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

கடந்த மாதம் 30–ந் தேதியன்று தொட்டாரெட்டிக்குப்பம் கிராம எல்லையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. அந்த மதுக்கடையை மூடக்கோரி கடையை முற்றுகையிட்டோம். இதை தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டது.

திருட்டுத்தனமாக விற்பனை


ஆனால் மீண்டும் மதுக்கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கடந்த 2–ந் தேதியன்று தொட்டாரெட்டிக்குப்பம், மாம்பேடு, அன்னாவரம், கயடை, புதுக்குப்பம், முக்கரம்பாக்கம், வண்டிமேட்டுக்கொல்லை, லட்சுமிபுரம் என 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இது தொடர்பாக புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தோம். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அந்த கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும் மூடப்பட்ட மதுக்கடை அருகே சிலர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்று வருகின்றனர். அவ்வப்போது மதுக்கடையை திறந்து மது விற்பனை செய்து வருகின்றனர்.

 இதனால் மன வேதனையடைந்த நாங்கள் எங்கள் பகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

பரபரப்பு


 நேற்று முன்தினம் தொட்டாரெட்டிக்குப்பம், தண்டலம், காக்கவாக்கம் பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மூடப்பட்ட மதுக்கடையை திறக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே எங்கள் பகுதியில் மதுக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது அவர்கள் அனைவரும் கையில் ரே‌ஷன் கார்டு வைத்து கொண்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

 பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர். இதனால் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story