புதுவையில் தமிழக அரசு பஸ்கள் 3–வது நாளாக ஓடவில்லை


புதுவையில் தமிழக அரசு பஸ்கள் 3–வது நாளாக ஓடவில்லை
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 17 May 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுவையில் தமிழக அரசு பஸ்கள் நேற்று ஓடவில்லை. இதனால் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுச்சேரி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந் தேதி இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் அவர்களின் போராட்டம் நீடித்தது. இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரியில் தமிழக அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

புதுவையில் இருந்து விழுப்புரம், கடலூர், திண்டிவனம், சிதம்பரம் பகுதிகளுக்கு அரசு பஸ்களுக்கு இணையாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று வருகின்றனர். இதே வேளையில் புதுவையில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

ஏமாற்றம் அடைந்தனர்


புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழக பஸ்கள் நேற்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது. குறைந்த அளவே இந்த பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் புதுவை பஸ்நிலையத்தில் காத்து நின்று இந்த பஸ்களை பிடித்து பயணம் செய்தனர். அதேவேளையில் புதுவையில் இருந்து சென்னைக்கு சில தனியார் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் பலர் அந்த பஸ்களில் ஏறுவதை தவிர்த்து புதுவை அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல திட்டமிட்டு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர். ஏற்கனவே வெளியூர் சென்ற பயணிகள் சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர்.

Next Story