புதிய தொழிற்கொள்கை வேலைவாய்ப்பினை உருவாக்க வழிவகுக்கும்


புதிய தொழிற்கொள்கை வேலைவாய்ப்பினை உருவாக்க வழிவகுக்கும்
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

புதிய தொழிற்கொள்கை வேலைவாய்ப்பினை உருவாக்க வழிவகுக்கும் கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை

புதுச்சேரி

புதிய தொழிற்கொள்கை மேலும் வேலைவாய்ப்பினை உருவாக்கும் என்று கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுவை சட்டசபையில் கவர்னர் கிரண்பெடி ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:–

புதிய தொழிற்கொள்கை



தடையற்ற மின்சாரம் வழங்குவது இவ்வாட்சிபரப்பின் தனி அடையாளமாகும். இந்திய அரசின் மின்சார அமைச்சகமானது இவ்வாட்சிபரப்புக்கு கூடுதலாக அண்மையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் புதிய அனல்மின் திட்டத்தில் இருந்து 53 மெகாவாட் மின்சக்தியை ஒதுக்கீடு செய்துள்ளது. மின்சக்தி வழங்கல் முறையின் திடநிலையை மேம்படுத்தும் பொருட்டு பழைய புதைவட கம்பிகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன.

புதியதாக அறிவிக்கப்பட்ட தொழிற்கொள்கையானது தொழில் செய்வதை எளிமையாக்கும். மேலும் அது தொழிற்சாலைகளுக்கான தடையின்மை சான்றிதழ், தொழிற்சாலைக்கான நிலவங்கி வசதி மற்றும் தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் பூங்காக்களில் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக பெறுவதற்கு வழிவகுக்கும்.

தொழில்துறையின் சிக்கல்களை போக்கும்பொருட்டு சரக்குகள் மற்றும் சேவை வரியால் ஏற்படும் பாதிப்பை சரிக்கட்டுவதற்காக புதிய தொழிற்கொள்கையானது, இவ்வாட்சிபரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும், மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். புதுச்சேரியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதே அரசின் நோக்கம்.

72 சேவைகள்


பொதுமக்களுக்கு வீட்டின் அருகாமையிலேயே வெவ்வேறு சேவைகளை வழங்கும்பொருட்டு இவ்வாட்சிபரப்பு முழுவதிலும் பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை அளித்தல், பட்டா மற்றும் செட்டில்மெண்ட் நகல் வழங்குதல் போன்ற சேவைகள் தற்போது பொதுச்சேவை மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின் மாவட்ட திட்டத்தின்கீழ் 11 தொடர்புத்துறையின் 72 சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிக்கலான நடைமுறையை தவிர்க்கும் வகையில் வணிக சமூகத்தினருக்கு வசதியாக 1964ம் ஆண்டு புதுச்சேரி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழான பதிவு, புதுப்பிப்பு ஆகியவற்றை எளிதாக்குதல் எனும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடு


மையப்படுத்தப்பட்ட பதிவு மையத்தில் மாணவர்கள் கூட்டமாக சேருவதை தடுக்கவும், அவர்களது சிரமங்களை குறைக்கும் வகையில் 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு மைய இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள அந்தந்த பள்ளிகளிலேயே சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Next Story