செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 17 May 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், பார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு

செங்குன்றம்

செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு இருந்த பார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலை பழைய விமான தளம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அந்த கடை மூடப்பட்டது. பின்னர் இந்த கடை செங்குன்றம் அருகே சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயநல்லூரில் நேற்று பகல் திறக்கப்பட இருந்தது.

அங்கு மதுபாட்டில்களும் கொண்டு வரப்பட்டன. டாஸ்மாக் கடை திறக்கப்போவதை அறிந்த விஜயநல்லூர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் தலைமையில் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடைக்கு பூட்டு

பின்னர், அங்கு அமைக்கப்பட்டு இருந்த நவீன பார் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கிருந்த டேபிள், சேர்கள் உடைக்கப்பட்டன. அப்போது பாரின் மேற்கூரை சரிந்து விழுந்தது. மேலும், டாஸ்மாக் கடையின் இரும்பு ‘ஷட்டரை’ பொதுமக்கள் உடைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த டாஸ்மாக் கடை திறக்கப்படாது என போலீசார் உறுதி அளித்து கடைக்கு பூட்டு போட்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story