நெல்லையில் பரிதாபம்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி


நெல்லையில் பரிதாபம்: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி
x
தினத்தந்தி 18 May 2017 2:00 AM IST (Updated: 17 May 2017 7:45 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த கண்டக்டர் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

நெல்லை,

நெல்லையில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த கண்டக்டர் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

பஸ் கண்டக்டர்

தூத்துக்குடி தெற்கு மூர்த்தி தெருவை சேர்ந்தவர் தவ்லத் ஷா(வயது 31). இவர் அரசு போக்குவரத்து கழக சாத்தான்குளம் டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். 2 நாட்கள் நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் தவ்லத் ஷாவும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் ஆனதால், தவ்லத் ஷா நேற்று பணிக்கு திரும்பினார். சாத்தான்குளம் பணிமனைக்கு சென்று பொறுப்பேற்று கொண்டார். அங்கு அவருக்கு திசையன்விளை–நெல்லை இடையே இயக்கப்படும் பஸ்சில் பணி வழங்கப்பட்டது. அந்த பஸ்சில் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சட்டநாதன் டிரைவராக இருந்தார்.

தவறி விழுந்து சாவு

திசையன்விளையில் இருந்து புறப்பட்ட பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை நோக்கி வந்தது. நெல்லை புதிய பஸ் நிலையத்தை பஸ் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் கண்டக்டர் தவ்லத் ஷா, இருக்கையில் இருந்து எழுந்து பஸ்சின் பின்பக்க வாசல் படிக்கட்டு பகுதிக்கு வந்தார். அங்கு கம்பியில் சாய்ந்தவாறு நின்று கொண்டு நெல்லை வந்து விட்டதை அறிவிப்பு செய்து கொண்டிருந்தார். என்.ஜி.ஓ. காலனி விலக்கு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கண்டக்டர் தவ்லத் ஷா வாசல் வழியாக வெளியே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதைக்கண்ட பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. டிரைவர் மற்றும் பயணிகள் உதவியுடன் தவ்லத் ஷாவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

பஸ் நிலையத்துக்குள் நுழைய ஓரிரு வினாடிகளே இருந்த நிலையில் கண்டக்டர் கீழே விழுந்து இறந்த சம்பவம் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடலை வாங்க மறுப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கண்டக்டர் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தவ்லத் ஷா குடும்பத்தினர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் தவ்லத் ஷா உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தவ்லத் ஷாவின் சகோதரர் வெளிநாட்டில் இருந்து வரவேண்டி இருப்பதால் உடலை ஒப்படைக்க தாமதம் ஏற்பட்டது’’ என்றனர்.

இறந்த தவ்லத் ஷாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Next Story