நெல்லை சந்திப்பில் மாற்றுத்திறனாளியின் பெட்டிக்கடை அகற்றம் போராட்டம் நடத்தியதால் வேறு இடத்தில் அமைக்கப்பட்டது


நெல்லை சந்திப்பில் மாற்றுத்திறனாளியின் பெட்டிக்கடை அகற்றம் போராட்டம் நடத்தியதால் வேறு இடத்தில் அமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 18 May 2017 2:15 AM IST (Updated: 17 May 2017 8:12 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பில் மாற்றுத்திறனாளியின் பெட்டிக்கடை அகற்றப்பட்டது. அவர் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தியதால் கடை வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை சந்திப்பில் மாற்றுத்திறனாளியின் பெட்டிக்கடை அகற்றப்பட்டது. அவர் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தியதால் கடை வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.

பெட்டிக்கடை

பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). மாற்றுத்திறனாளி. இவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மதுரை ரோட்டையொட்டி பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு டெலிபோன் பூத் அமைக்கும் வகையில் இந்த கடைக்கு அனுமதி வழங்கப்பட்டது. டெலிபோன் தேவை குறைந்து விட்டதால், ராமச்சந்திரன் கடையில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த கடை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்டிக்கடையை அகற்ற முயற்சி செய்த போது, கடை முன்பு ராமச்சந்திரன் வி‌ஷத்தை குடித்து படுத்து போராட்டம் நடத்தினார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய ராமச்சந்திரன், கலெக்டரிடம் கடையை அகற்றக்கூடாது என்று கோரி மனு கொடுத்தார்.

அகற்றம்

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று நெல்லை சந்திப்புக்கு வந்தனர். அவர்கள் கிரேன் உதவியுடன் ராமச்சந்திரன் பெட்டிக்கடையை அகற்றினர். அப்போது ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினார். தனக்கு மாற்று வழி ஏற்படுத்தி தருமாறும் கேட்டார். அப்போது நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அதிகாரிகள் பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் ஆட்டோ நிறுத்தம் அருகில் அகற்றப்பட்ட பெட்டிக்கடையை வைத்தனர். மேலும் ராமச்சந்திரன் கடை அருகில் செருப்பு வியாபாரம் செய்யப்பட்டு வந்த மற்றொரு பெட்டிக்கடையை அதிகாரிகள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story