வழித்தடத்தை மாற்றி பணி வழங்கியதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


வழித்தடத்தை மாற்றி பணி வழங்கியதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 18 May 2017 3:30 AM IST (Updated: 18 May 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

வழித்தடத்தை மாற்றி பணி வழங்கியதை கண்டித்து திண்டிவனத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம்,

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்பட்டதால், வேலை நிறுத்த போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர்.

திடீர் போராட்டம்

இதைத்தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். அதன்படி நேற்று திண்டிவனம் போக்குவரத்து கழகத்துக்கு பணிக்காக தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த கிளை மேலாளர் சிவக்குமார், புறநகர் பகுதி பஸ்களில் பணியாற்றி வந்த பல கண்டக்டர், டிரைவர்கள் ஆகியோரை டவுன் பஸ்களிலும், டவுன் பஸ்களில் பணியாற்றி வந்த பல கண்டக்டர் மற்றும் டிரைவர்களை புறநகர் பஸ்களிலும் பணியாற்ற உத்தரவிட்டதாக தெரிகிறது.

இந்த பணி மாற்றத்திற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கிளை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பணிமனை வளாகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர்கள், மாற்று வழித்தடத்தில் பணி வழங்காமல் வழக்கம்போல் பணி வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும், கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் திண்டிவனம் பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீசார் போக்குவரத்து பணிமனைக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் கிளை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பரபரப்பு

இதனிடையே பொது மக்கள் நலன் கருதி, பகல் 12 மணிக்கு தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிமனையில் இருந்து வழக்கம் போல் பஸ்களை இயக்கி டிரைவர்கள், கண்டக்டர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story