போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பி ஓட முயன்ற மோட்டார் சைக்கிள் திருடன், பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்


போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பி ஓட முயன்ற மோட்டார் சைக்கிள் திருடன், பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்
x
தினத்தந்தி 18 May 2017 4:00 AM IST (Updated: 18 May 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் ரோந்து பணியின்போது போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பி ஓட முயன்ற மோட்டார் சைக்கிள் திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

அரியாங்குப்பம்,

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் அதிகரித்தது. இதை தடுக்கவும், மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்யவும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அரியாங்குப்பம் பீட் போலீசார் முனுசாமி, ராஜேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மாஞ்சாலை காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். அந்த வாலிபர் சிறிது தூரத்துக்கு முன்பே மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.

கண்களில் மண்ணை தூவினார்

இதையடுத்து போலீசார் விரட்டிச் சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது கீழே கிடந்த மண்ணை எடுத்து போலீசாரின் கண்களில் அந்த வாலிபர் வீசினார். இதில் போலீசார் இருவரும் நிலைகுலைந்தனர். உடனே அங்கு நின்றிருந்த பொதுமக்கள், தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அவர் வில்லியனூர் அடுத்த உத்திரவாகினிபேட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 25) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த விலைஉயர்ந்த செல்போன் குறித்து விசாரித்தபோது, வீராம்பட்டினம் சாலையில் உள்ள தனியார் மதுக்கடைக்கு சென்றவரிடம் திருடியதாக கூறினார். இதையடுத்து மோட்டார் சைக்கிள், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழு மலையை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர் மீது வில்லியனூர், அரியாங்குப்பம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story