பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி


பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 May 2017 4:00 AM IST (Updated: 18 May 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்து. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி,

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று காலை 9.15 மணிக்கு நடந்தது.

முன்னதாக திருக்கால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு வெற்றிலை மற்றும் மங்கல பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு மேள தாளம் முழங்க கோவிலின் 4 பிரகாரங்களையும் சுற்றி கொண்டுவரப்பட்டது.

அதன்பிறகு நவசக்தி மண்டபம் முன்பு திருக்கால் நாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து விஷேச பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

திரளான பக்தர்கள்

நிகழ்ச்சியில் புதிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கண்ணபிரான் கலந்து கொண்டார். மேலும் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவக்குமார், தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மழை வேண்டி யாகம்

முன்னதாக வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி வர்ண பகவானுக்கு யாகம் நடத்தப்பட்டது. கோவிலின் மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல், பத்மநாபன், கீழ்சாந்திகள் சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த யாகத்தை நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

யாகம் முடிந்த பிறகு 25 கலசங்களில் இருந்த புனித நீர் மூலம் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story