பஸ் மீது வேன் உரசியதால் விபத்து படிக்கட்டில் பயணம் செய்த கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்


பஸ் மீது வேன் உரசியதால் விபத்து படிக்கட்டில் பயணம் செய்த கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 18 May 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே பஸ் மீது வேன் உரசிய விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கொத்தனார் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் கீழத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் அருண்குமார் (வயது19). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவரும், நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மகன் தமிழரசன் (18), சோழவித்யாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தன்ராஜ் மகன் இளமாறன் (30) ஆகிய 3 பேரும் வேலைக்காக கீழையூரில் இருந்து தனியார் பஸ்சில் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் 3 பேரும் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருப்பூண்டி பஸ் நிறுத்தத்திற்கு செல்ல பிரிவு சாலையில் பஸ் திரும்பியுள்ளது. அப்போது எதிரே வேளாங்கண்ணியில் இருந்து வந்த வேன் பஸ்சின் பின்பக்கத்தில் உரசியது.

கொத்தனார் பலி

இதில் படியில் நின்று கொண்டிருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அருண்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கரூர் மாவட்டம் அரவங்குறிச்சி பகுதியை சேர்ந்த மணி (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story