இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேச்சு


இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேச்சு
x
தினத்தந்தி 19 May 2017 4:15 AM IST (Updated: 19 May 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது என்று தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு, நீட் தேர்வு ரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. கருத்தரங்குக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழ் மொழி

கருத்தரங்கில் ஆ.ராசா பேசியதாவது:- இந்தியா ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரே கலாசாரம் கொண்ட நாடு அல்ல. இங்கு 2 பெரிய கலாசாரம் உண்டு. ஒன்று ஆரிய கலாசாரம், மற்றொன்று திராவிட கலாசாரம். இந்தியாவின் மீது பல நாட்டினர் படையெடுத்து வந்து தங்கள் மொழிகளை பரப்பினர். இதனால் இந்தியாவில் பல மொழிகள் அழிந்தன. எத்தனை பண்பாட்டு படையெடுப்புகள் நடந்த போதிலும் சிதையாமல் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. பல மொழிகள் பேசப்பட்டாலும், திணிக்கப்பட்டாலும் தமிழ் தன் அடையாளத்தை இழக்கவில்லை.

இந்தியை திணிக்க முயற்சி

இந்தியும், சமஸ்கிருதமும் இந்த மண்ணுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. இந்தி படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான தகவலை பரப்பி, தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சி நடக்கிறது.

500 ஆண்டுகளுக்கு முன்பு இந்திக்கு எழுத்து கிடையாது. இலக்கணம் கிடையாது. ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் அறிவியல் இருந்து உள்ளது. அறிவியல் வளர்ச்சி, இலக்கியம், பண்பாடு, சொல்வளம் கொண்ட மொழி தமிழ். இத்தகைய தமிழ்மொழியும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் உள்ளது. இதனை விட்டு விட்டு ஏன் இந்தியை திணிக்கிறீர்கள்.

ஒரு மொழியை கூடுதலாக படிப்பது என்பது தவறு இல்லை. ஆனால் நமது பண்பாடு, கலாசார சின்னங்களை அழித்து, ஒரு இனத்தை, ஒரு மொழியை ஒடுக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், செயற்குழு உறுப்பினர் திருச்சிற்றம்பலம் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story