வறட்சியிலும் கிணற்று பாசனத்தால் செழித்து வளர்ந்துள்ள நெற்கதிர்கள்


வறட்சியிலும் கிணற்று பாசனத்தால் செழித்து வளர்ந்துள்ள நெற்கதிர்கள்
x
தினத்தந்தி 19 May 2017 4:00 AM IST (Updated: 19 May 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே கடும் வறட்சியான சூழ்நிலையிலும் கிணற்று பாசனத்தின் மூலம், நெல் விவசாயம் செழித்து வளர்ந்துள்ளது.

திருப்பரங்குன்றம்,

சமீப காலமாக பருவமழை பொய்த்ததால் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே விவசாயம் மட்டுமல்லாது விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விகுறியானது. மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்களின் அன்றாட தேவைக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது. கால்நடைகள் குடிக்க நீரின்றி தவித்து வருகின்றன. அவற்றின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது.

இந்தநிலையில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. முக்கிய நீர்நிலைகள் வறண்டு, பாலம் பாலமாக நிலங்கள் வெடித்து காணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் விவசாயிகள், பொதுமக்கள் மழை வருமா? என்று ஏக்கத்துடன் வானத்தை பார்த்து வருகின்றனர்.

செழுமையான வளர்ச்சி

இந்த சோதனையான காலக்கட்டத்திலும், மனத்திற்கு மகிழ்ச்சி தரும் வகையில், வறட்சியிலும் வளம் உண்டு என்பதின் அடையாளத்தை காட்டி உள்ளது இயற்கை. திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் அருகே உள்ள 4 வழிச்சாலையின் கீழ்புறம் விவசாயி கண்ணன், தனது வயலின் ஒரு பகுதியில் நெல்லும், மற்றொரு பகுதியில் வாழையும் பயிரிட்டு கிணற்று தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்தார்.

அதன்மூலம் வயிலில் நெற்கதிர்களும், வாழையும் செழுமையாக விளைந்து அந்த பகுதி பச்சைபசேலென கண்ணிற்கு குளிர்ச்சியாக காணப்படுகிறது. பூமி முழுவதும் காய்ந்து வறண்டு கிடக்கும் நிலையில், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கிணற்று பாசனம் மூலம் செய்யப்பட்ட விவசாயத்தில், பூமி தனது வளத்தை காண்பித்தும், விவசாயிக்கு கை கொடுத்தும் உள்ளது என்றால் மிகையாகாது.


Related Tags :
Next Story