திருவள்ளூர் நகராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு
திருவள்ளூர் நகராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.
நகர அமைப்பு ஆய்வாளர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். அப்போது நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் கூறியதாவது:–
திருவள்ளூர் நகராட்சியில் 20–10–2016 மற்றும் அதற்கு முன்னர் மனைகள் வாங்கியிருப்போர் தங்களது மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்திட ஏதுவாக தமிழக அரசு அரசாணை எண் 78 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் 4–5–2017–ல் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்துவது மேற்கண்ட விதிகளின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 20–10–2016 மற்றும் அதற்கு முன்னர் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் மனை வாங்கியவர்கள், மனைப்பிரிவை உருவாக்கியவர்கள் தங்களது மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள நகராட்சி அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டும்.
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்நகரில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை கணக்கெடுப்பு நடத்தி அவற்றின் வரைபடங்கள், நகராட்சியில் முதலில் தயாரிக்கப்பட உள்ளது. பின்னர் அவை நகர் ஊரமைப்பு துறைக்கு அனுப்பப்பட்டு நகர் ஊரமைப்பு துறையால் வரன்முறை செய்யப்பட்ட உடன் அதில் உள்ள மனைகள் உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணங்களின் பெயரில் நகராட்சியால் வரன்முறை செய்யப்படும். எனவே அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் மனை வாங்கியவர்கள், மனைப்பிரிவை உருவாக்கியவர்கள் தங்களது மனைப்பிரிவு குறித்த விவரங்களை உடனடியாக நகராட்சியில் அளித்து மனைப்பிரிவு வரைபட ஒப்புதலை முதலில் பெற்றிட ஏதுவாக நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உரிய காலக்கெடுவுக்குள் தங்களது மனைகளை வரன்முறைப்படுத்தாதவர்கள் தங்களது மனைகளை இனிவரும் காலத்தில் விற்கவோ, பதிவாளர் அலுவலத்தில் பதிவு செய்யவோ, கட்டிட அனுமதி பெறவோ முடியாது. மேலும் அந்த மனைகளுக்கு குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, மின்இணைப்பு வழங்கப்பட்டிருப்பின் அவற்றை துண்டிப்பு செய்ய அரசால் விதிதிருத்தம் செய்யப்பட உள்ளது.
40 அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள்தற்போது சுமார் 40 அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள் நகராட்சியால் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மனைகளை வரன்முறை செய்திட சதுரமீட்டர் ஒன்றுக்கு ரூ.60, அபிவிருத்திக்கட்டணம் சதுரமீட்டர் ஒன்றுக்கு ரூ.250, விண்ணப்ப ஆய்வு கட்டணம் ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திறந்த வெளி பகுதி விடாமல் அனைத்து மனைகளும் விற்கப்பட்ட மனைப்பிரிவுகளில் திறந்த வெளி பகுதிக்கான கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். 3–ல் 2 பங்கு மனைகளின் எண்ணிக்கை விற்கப்படாத மனைப்பிரிவுகளில் திறந்த வெளிப்பகுதிக்கான இடம் கண்டிப்பாக விடப்படவேண்டும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பூந்தமல்லிபூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரன்முறை படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வைத்து இருப்பவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள் என 40–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திலும் 20.10.2016–க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வாங்கியவர்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.