கர்நாடக அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி


கர்நாடக அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
x
தினத்தந்தி 19 May 2017 3:47 AM IST (Updated: 19 May 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

பெல்லந்தூர் ஏரியை தூய்மைப்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டதால் கர்நாடக அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பெங்களூரு

பெல்லந்தூர் ஏரியை தூய்மைப்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டதால் கர்நாடக அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பெல்லந்தூர் ஏரி

பெங்களூரு பெல்லந்தூரில் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த ஏரியில் இயற்கை எழில் கொஞ்சியது. இந்த 15 ஆண்டுகளில் பெங்களூரு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள், பெரிய தொழில் நிறுவனங்கள் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் பெல்லந்தூர் ஏரியில் விடப்படுகிறது. இதனால் ஏரி முற்றிலுமாக மாசு அடைந்துவிட்டது. ஆள் உயரத்துக்கு நுரை உற்பத்தியாகி பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அவ்வப்போது ஏரியில் தீப்பற்றி எரிகிறது. இதனால் ஏரியை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

தூய்மைப்படுத்தும் பணி

இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் இதுபற்றி தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்து, விசாரணை நடத்தியது. அப்போது பெல்லந்தூர் ஏரியை அசுத்தப்படுத்தும் தொழிற்சாலைகளை உடனே மூடும்படியும், அந்த ஏரியை தூய்மைப்படுத்தும்படியும் உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெல்லந்தூர் ஏரியில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகளை மூடும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மேலும் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. நவீன எந்திரங்கள் உதவியுடன் ஏரியில் முளைத்துள்ள செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் ஏரியை தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையா நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே அந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக நகர வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மகேந்திர ஜெயின் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆஜராயினர். பெல்லந்தூர் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

கர்நாடக அரசு மீது அதிருப்தி

அதில், ஏரியை தூய்மைப்படுத்த கூடுதல் கால அவகாசம் அதாவது ஜூலை மாதம் வரை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி சுதந்திரக்குமார், “பெல்லந்தூர் ஏரியை முன்பே சுத்தப்படுத்தி இருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.

இப்போது நிலைமை கைமீறிய நிலையில் நீங்கள் மீண்டும் கால அவகாசம் கேட்கிறீர்கள். இது சரியல்ல. அந்த ஏரியை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஏரியை அசுத்தப்படுத்திய தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளோம். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Next Story