சுரங்க மார்க்கமாக அமையும் 3-வது மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகள் தொடங்கியது


சுரங்க மார்க்கமாக அமையும் 3-வது மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 19 May 2017 4:10 AM IST (Updated: 19 May 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் சுரங்க மார்க்கமாக அமையும் 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கியது.

மும்பை,

மும்பையில் சுரங்க மார்க்கமாக அமையும் 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கியது.

3-வது மெட்ரோ ரெயில் திட்டம்

மும்பையில் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நகரில் மோனோ மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

முதற்கட்டமாக வெர்சோவா- அந்தேரி- காட்கோபர் இடையே மெட்ரோ ரெயில் திட்டமும், செம்பூர்- வடாலா இடையே மோனே ரெயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.23,136 கோடி

மும்பையில் 3-வது மெட்ரோ ரெயில் திட்டம் கொலபாவில் இருந்து பாந்திரா வழியாக சீப்ஸ் வரையிலும் 32.5 கி.மீ. தூரத்திற்கு சுரங்க மார்க்கமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ரூ.23 ஆயிரத்து 136 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் கப்பரடே, விதான்பவன், சர்ச்கேட், ஹூதாத்மா சவுக், சி.எஸ்.டி, கல்பாதேவி, கிர்காவ், கிராண்ட்ரோடு, மும்பை சென்டிரல், மகாலட்சுமி, சயின்ஸ் மியூசியம், ஆச்சார்யா ஆத்ரே சவுக், ஒர்லி, சித்திவினாயக், தாதர், சீதளாதேவி, தாராவி, பாந்திரா ஒர்லி காம்ப்ளக்ஸ், வித்யாநகரி, சாந்தாகுருஸ், உள்நாட்டு விமான நிலையம், சாகர் ரோடு, சர்வதேச விமான நிலையம், மரோல்நாக்கா, எம்.ஐ.டி.சி., சீப்ஸ், ஆரேடெப்போ ஆகிய 27 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இதில் 26 ரெயில் நிலையங்கள் சுரங்க மார்க்கமாக அமைய உள்ளன. இந்த திட்டப் பணிகளை மும்பை மெட்ரோ ரெயில் கழகம் மேற்கொள்கிறது.

கட்டுமான பணிகள் தொடங்கியது

3-வது மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் கடந்த 2015-ம் ஆண்டே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல், பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தாமதம் அடைந்து வந்தது.

இந்தநிலையில், 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இதில், முதல் கட்டுமான பணிகளாக ஹூதாத்மா சவுக், கல்பாதேவி, கிர்காவ், எம்.ஐ.டி.சி, ஒர்லி மெட்ரோ ரெயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

இந்த பணிகள் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


Next Story